http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 141

இதழ் 141
[ ஏப்ரல் 2018 ]


இந்த இதழில்..
In this Issue..

செய்திகள் வாசிப்பது வரலாறு டாட் காம் - 2
கோட்டாராப்பட்டியில் ஒரு காலை!
கயிலைப் பயணம் - 3
எழும்பூர் அற்புதக் காட்சியகம்
ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகுமோ?!
மாமல்லபுரக் குடைவரைகள் - 2
இதழ் எண். 141 > கலையும் ஆய்வும்
எழும்பூர் அற்புதக் காட்சியகம்
ச. கமலக்கண்ணன்
வெளிநாட்டவர்கள் பணி நிமித்தமாகவோ சுற்றுலாவுக்கோ இந்தியா வரும்போது காணவிரும்பும் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது தாஜ்மகால். இந்தியாவுக்கு வந்து போயிருக்கும் வெளிநாட்டவர்களில் பெரும்பாலானோர் கண்டு களித்திருப்பார்கள். தென்னிந்தியாவுக்கு வருபவர்கள் தென்னிந்தியர்களிடம் பேசத் தொடங்கியவுடன் ஆச்சரியப்படும் விஷயம், பெரும்பாலானவர்கள் இன்னும் தாஜ்மகாலைப் பார்த்ததில்லை என்பதே. நான் ஜப்பானிலிருந்தபோதும் இப்படி அதிர்ச்சியடைந்தவர்களைக் கண்டிருக்கிறேன். ஜப்பானில் வரலாற்றுச் சிறப்புமிக்க பழங்கோயில்களைப் பள்ளிப்படிப்பைத் தாண்டுவதற்குள் ஒருமுறையாவது பார்த்திருக்கவேண்டும் என்பது ஓர் எழுதப்படாத விதி. வேறென்ன, கூடுதல் மதிப்பெண்கள் கிடைப்பதுதான். ஆனால் இந்தியாவில் நிலைமை வேறு. பொருளாதாரக் காரணங்களும் நியாயமானவையே.

தமிழகத்துக்குள்ளேயே சென்ற தலைமுறைக்கு முன்புவரை தஞ்சாவூர், ஶ்ரீரங்கம், மதுரை போன்ற பெருங்கோயில்களைக் கண்டிருந்தவர்களும் மிகக்குறைவே. ஒவ்வொரு ஊரிலும் ஒருவரோ இருவரோ சென்று வந்து மற்றவர்களுக்குச் சொல்லும் கதைகள் மூலமாகத்தான் இக்கோயில்களைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பார்கள். நம் மாநிலத்தின் உள்கட்டமைப்பு, போக்குவரத்து வசதிகள் மேம்பட்டதால் இன்று எளிதாக இங்கெல்லாம் அடிக்கடி சென்றுவர முடிகிறது. இருப்பினும் இன்னும் தஞ்சாவூரைப் பார்த்திராத சென்னைவாசி ஒருவரை அண்மையில் சந்திக்க நேர்ந்தது. நம் மின்னிதழின் தீவிர வாசகர் திரு. இராகவன் அவர்கள். பழகுவதற்கு மிகவும் இனியவர். சென்னை வடபழனியில் வசிக்கும் இவர் குன்றத்தூரிலிருக்கும் சிதிலமடைந்த சோழர்காலக் கோயில் ஒன்றைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ள நம்மைத் தொடர்பு கொண்டார். கடந்த மாதத்தில் ஒருநாள் அவருடன் குன்றத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள சில கோயில்களைக் காணும் பேறு கிடைத்தது. வழியெங்கும் அவர் உரைத்த கருத்துக்கள், முன்வைத்த ஐயங்கள், வரலாற்றின்பால் இவர் கொண்ட ஆர்வம், இவற்றைக் கண்டபோது நாங்கள் ஆரம்ப காலத்தில் முனைவர் இரா. கலைக்கோவன் அவர்களிடம் கேட்ட கேள்விகள் ஒருகணம் செவியில் ஒலித்து மறைந்தன.

இதற்கு மாறாக, சிலர் வெளியூரிலுள்ள கோயில்களைப் பார்த்திருப்பார்கள், ஆனால் உள்ளூரிலிருக்கும் பழங்கோயிலைப் பார்த்திருக்க மாட்டார்கள். எங்கள் குழுவினர்கூட முதலில் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம் எனச் சுற்றிய பிறகே மாமல்லபுரத்தையும் காஞ்சிபுரத்தையும் பார்த்தோம். திருச்சிராப்பள்ளிக்குச் சென்றாலும் அதைச் சுற்றியுள்ள பல கோயில்களைத்தான் முதலில் பார்த்தோமே தவிர, நகருக்குள்ளேயே இருக்கும் உய்யக்கொண்டான் திருமலை போன்றவற்றை அண்மையில்தான் காணவாய்த்தது. அதேபோல்தான் சென்னைக்குள்ளேயே இருக்கும் ஓர் அற்புதக் காட்சியகத்தையும் இத்தனை நாட்கள் தவறவிட்டிருந்தோம்.

வெண்ணெயைக் கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலையும் பேறு பலருக்கும் வாய்த்திருக்கும். 2010ல் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் அப்போது புதிதாகக் கண்டறியப்பட்டிருந்த செப்பேட்டுத் தொகுதி ஒன்றைக் காணவும் படிக்கவும் படாதபாடு பட்டோம். அன்று கண்ணால் காணமுடிந்ததே தவிர, பொறுமையாகப் படித்துப் பார்க்கும் அளவுக்கு நேரமும் வசதியும் கிடைக்கவில்லை. பின்னர்த் திருவையாறு, புள்ளமங்கை எனப் பல்வேறு பயணங்கள் முன்னுரிமை பெற்றதால் செப்பேடுகள் பின்னுக்குச் சென்றுவிட்டன. சில மாதங்களுக்கு முன்பு முனைவர் இரா. கலைக்கோவன் அவர்கள் சென்னை வரும் சேதியறிந்தவுடன் அவருடன் சேர்ந்து எழும்பூரிலிருக்கும் அருங்காட்சியகத்தைக் காணும்படி முடிவானது.

இந்தியாவின் பிற நகரங்களிலும் வெளிநாடுகளிலும் நன்றாகப் பராமரிக்கப்படும் காட்சியகங்களில் நுழையவும் புகைப்படம் எடுக்கவும் கட்டணங்கள் மிக அதிகமாக வசூலிக்கப்படுகின்றன. எடுக்கும் ஒவ்வொரு புகைப்படத்துக்கும் கட்டணம் வசூலிக்கும் அருங்காட்சியகங்களும் வட இந்தியாவில் உள்ளதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இங்கு 15 ரூபாய் மட்டுமே நுழைவுக்கட்டணமாகவும் 200 ரூபாய் மட்டுமே புகைப்படம் எடுக்கவும் செலுத்தவேண்டியிருக்கிறது. இது பலமுறை சென்று ஆய்வு மேற்கொள்ள விரும்பும் ஆய்வாளர்களுக்குப் பேருதவியாக இருப்பதை மறுப்பதற்கில்லை. கட்டணங்கள் குறைவாக இருக்கிறது என்பதற்காக உள்கட்டமைப்பிலோ பராமரிப்பிலோ எவ்விதக் குறையும் வைக்கவில்லை. தமிழ்நாடு தொல்லியல்துறை மற்றும் அருங்காட்சியகங்கள் துறைக்கு வரலாறு.காம் மின்னிதழின் மனமார்ந்த பாராட்டுக்கள்.

நுழைவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டு முதன்மைக் காட்சியரங்குக்குள் நுழைந்தவுடன் நம்மை வரவேற்கின்றன பல்லவர் மற்றும் சோழர்காலச் சிற்பங்களும் கல்வெட்டுகளும். இவ்வருங்காட்சியகத்தின் உதவி நிர்வாக இயக்குனராக இருப்பவர் திருமதி துளசி பிருந்தா அவர்கள். தரைத்தளத்திலுள்ள சில சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளின் குறிப்புகளில் சில தவறாக இருந்ததைச் சுட்டிக்காட்டியபோது அவற்றைக் களைவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஓர் அரசு உயரதிகாரி வரலாற்றாய்வாளர்களின் குரலுக்குச் செவிமடுத்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்வைத் தந்தது.





மேல்தளத்தில்தான் நாம் செம்மொழி மாநாட்டில் காணவிரும்பிய செப்பேடுகள் தொகுதி வைக்கப்ப்பட்டிருக்கிறது. பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள், நாயக்கர்கள், விஜயநகரப் பேரரசு, சேதுபதி மன்னர்கள், ஆங்கிலேயர்கள் எனக் காலவாரியாகச் செப்பேடுகள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இப்பகுதியில் செப்பேடுகளைப் பற்றிய பயனுள்ள கீழ்க்காணும் விளக்கப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியா அதிக எண்ணிக்கையிலான கோயில்கள், அதிசயங்கள், புராணங்கள் மற்றும் அழகுமிக்க பூமி. கல்வெட்டுகள் நிறைந்த பூமி என்றும் அறியப்படுகிறது. இந்தியாவிலுள்ள பெரும்பாலான சாசனங்கள் தென்னிந்திய மாநிலங்களிலேயே அமையப் பெற்றுள்ளன. குறிப்பாகத் தமிழ்நாடு அதிக அளவிலான கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது. கல்மீது காணப்படும் ஆவணங்கள் வடமொழியில் "சிலாசாசனம்" என்றும் தமிழில் "கல்வெட்டு" அல்லது "கல்லெழுத்து" என்றும் அழைக்கப்படுகின்றன. செப்பேடுகள், தாமிரசாசனம், தாமிரப்பட்டயம், செப்பேடு, செப்புப்பட்டயம் அல்லது சாதாரணமாகப் பட்டயம் என்றும் அழைக்கப்படுகிறது. கல்வெட்டுகள் அதிகமாகக் காணப்படுகிற அளவுக்கு ஒப்பீடாகச் செப்பேடுகள் எண்ணிக்கையில் மிகக் குறைந்த அளவே உள்ளன. எவ்வாறாயினும், குறைந்த எண்ணிக்கையில் கிடைக்கும் செப்பேடுகள் கல்வெட்டுச் சான்றுகளுடன் இயைந்து வரலாற்று உண்மைகளைக் கூறுவதால் வரலாற்றாளர்களுக்கும் தொல்லியலாளர்களுக்கும் பயனளிக்கின்றன. பல ஆண்டுகளாகத் தொடாமல் விடுபட்டுப் போன வரலாற்றுண்மைகளை மீட்டுருவாக்கம் செய்யச் செப்பேடுகள் உதவுகின்றன.

பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறிடங்களில் எதிர்பாராவிதமாகக் கண்டறியப்படும் அனைத்து முக்கியமான அரசவமிசங்களால் மட்டுமல்லாமல் சிறிய ஜமீன்தாரர்களாலும்கூட வெளியிடப்பட்டுள்ளன. உழவர்கள் நிலத்தினை உழும்போது நிலத்தினடியில் செப்பேடுகள் கண்டறியப்படுகின்றன. சில நேரங்களில் பழங்காலத்தில் கைவிடப்பட்ட பாழடைந்த வீடுகளிலிருந்தோ பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பூட்டப்பட்டுத் திறக்கவேபடாத இருப்பறைகளிலிருந்தோ செப்பேடுகள் கண்டெடுக்கப்படுகின்றன. செப்பேடுகள் இவ்வாறாகக் கண்டுபிடிக்கப்படும்போதும் அதன் சாசனவரிகள் பொருளுணர்ந்து கண்டறியப்படுகின்றபோதும் வரலாற்றாளர்கள் மற்றும் கல்வெட்டு மாணாக்கர்கள் பெருமகிழ்ச்சி அடைகின்ற பொருளாகத் திகழ்கிறது.

இந்தச் செப்பேடு சாசனவரிகள் பொதுவாக மன்னன் ஒருவனால் கோயில்களுக்கு வழங்கப்பட்ட நிலதானத்தினையோ அல்லது மன்னனால் மெச்சப்படும் அளவு மதிநுட்பம் மிக்க பண்டிதர்களுக்கு வழங்கப்பட்ட தானத்தினையோ குறிப்பதாக உள்ளன. தானம் பெறுபவர் மற்றும் தானம் பெறுபவரது சந்ததியினர் பாதுகாப்பினைச் செப்பேடுகள் உறுதிப்படுத்துகின்றன. எப்போதுமே செப்பேட்டு வரிகள் ஒரு குறிப்பிட்ட முறைமையிலேயே அமைக்கப்பட்டிருக்கும். செப்பேடுகள் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட வடமொழி இறைவழிபாட்டுச் சுலோகங்களுடன் தொடக்கத்தினைப் பெறும். பின்னர் தொடர்ந்து தானம் வழங்குகின்ற மன்னனின் மரபுவழியையும் பிறகு தானமாக வழங்கப்படும் கிராமத்தின் பெயர் அல்லது தானம் வழங்கப்படுகிற நிலத்தினை உள்ளடக்கிய கிராமவிவரம் மற்றும் தானம் பெறுபவர் அவரது குடும்பப் பின்னணி போன்ற விவரங்கள் குறிக்கப்பட்டிருக்கும்.

நிலதானத்தில் பங்கேற்ற அலுவலர்கள் மற்றும் நிலத்தினை அளக்க மதிப்பிட உதவி வழங்கியோர் பெயர்கள், செப்பேட்டினை வெட்டிக்கொடுத்தோர் பெயரும் விடுபடாமல் செப்பேடுகளில் குறிக்கப்பட்டிருக்கும். செப்பேட்டின் முதல்பகுதி எப்போதுமே வடமொழியில் இருக்கும். விவரங்களை உள்ளடக்கிய இரண்டாவது பகுதி எப்போதுமே தமிழ், தெலுங்கு அல்லது கன்னடத்தில் இருக்கும்.

தானமாகப் பெற்றவரிடமிருந்து எதிர்காலத்தில் அபகரிக்க முயல்வோர், செப்பேட்டினைக் களவாட அல்லது திருத்தம் செய்ய முயல்வோரை எச்சரிக்கும் விதமாகச் சாபவாசகங்கள் அடங்கிய ஓம்படைக்கிளவியுடன் செப்பேட்டுச் சாசனங்கள் நிறைவு பெறுவது என்று பொதுவாக ஒரு விதியாகவே உள்ளது.

தொடக்ககாலச் செப்பேடுகள் மெழுகு இழப்பு முறையில் உருவாக்கம் செய்யப்பட்டதினால் அவை அதிகக் கனமான தகடுகளைக் கொண்டதாகவும் தனித்த எழுத்துமுறையினைக் கொண்டதாகவும் விளங்கின. பிற்காலங்களில் மெல்லிய தகடுகளும் எழுத்துக்களை வெட்டிப் பதிப்பிக்கின்ற முறையும் வழக்க்கத்திலிருந்தன.

சென்னை அருங்காட்சியகச் சேகரிப்பிலுள்ள நன்கறியப்பட்ட பல்லவ, பாண்டிய, சோழ, சேர, விஜயநகர, நாயக்க, சேதுபதி மற்றும் பிரிட்டிஷ் மன்னர்களின் செப்பேடுகள், தனியார் செப்பேடுகள் இங்குக் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.





























இங்கிருந்து இணைப்புப்பாலத்தின் வழியாகச் சென்றால் எதிர்ப்படுவது இந்து மதக் கடவுளர் சிற்பத்திருமேனிகள். அதற்கு அடுத்ததாக பௌத்த மற்றும் சமணச் சிற்பத் தொகுதிகளும் அடுத்து அமராவதி கலைக்கூடமும் உள்ளன. அமராவதி நகரையே சென்னையில் மறுகட்டமைப்புச் செய்து விட்டார்களோ என வியக்க வைக்கும் அளவுக்கு நேர்த்தியாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அப்பப்பா! எத்தனை கட்டடக்கலைக் கூறுகள்!!





இதைத் தாண்டியபிறகு அறிவியல் காட்சிக்கூடங்கள் நம்மை வரவேற்கின்றன. வரலாற்றாய்வாளர்களுக்கு அமராவதியுடன் இவ்வரங்கு முடிந்து விடுவதில்லை. அறிவியல் அரங்குகளிலும் ஒரு வழிகாட்டி இருக்கிறார். இவரது தூய தமிழைக் கேட்டு இன்புறாவிட்டால் இவ்வருங்காட்சியகப் பயணம் நிறைவுற்றதாகக் கூறமுடியாது. இவர் பெயர் திரு. செல்வராசன். ஒரு சொல் கூடப் பிறமொழிக் கலப்பின்றித் தூய தமிழில் விலங்கியல் காட்சிக்கூடத்தின் படிமங்களை இவர் விளக்கும் நேர்த்தியைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.







இதுமட்டுமின்றி, நடமாடும் அருங்காட்சியகம் ஒன்றையும் செயல்படுத்த விழைந்திருப்பது பாராட்டுக்குரியது. செப்புப் படிமங்கள் இருக்கும் அரங்கத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் பார்வையாளர்கள் மேல்தளத்தில் அனுமதிக்கப்படவில்லை. அது திறக்கப்பட்டபின் மீண்டும் சந்திப்போம்.

இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.